கூடங்குளத்திலிருந்து மின்சாரம் வருவதனால், மின் இணைப்பை துண்டித்து இரண்டு வருடங்களாக இருளில் வாழும் போராளி

Filed under: Featured,Latest,Naatu Nadappu,Poraali Polambals |

சென்னை: கூடங்குளத்தில் அனல்மின் நிலையம் அமைப்பதற்கு எதிராக சில ஆண்டுகள் முன்பு மாபெரும் போராட்டங்கள் நடந்து வந்தது. இதற்க்கு இணையம் மூலம் ஆதரவு அளித்து வந்த போராளி இன்றோ இருளிலே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். அவரை அவரது வீட்டுவாசலில் சந்தித்தோம்.

Koodankulam

‘இப்படியே கூடங்குளத்திற்கு போராடிய அனைவரும் தன்மானத்துடன் மின் இணைப்பை துண்டித்துக்கொண்டால், அதுவும் ஒரு வகை போராட்டம் தானே’ எனக்கூறிய போராளியின் வீட்டில் வைத்து அவரை நாங்கள் புகைப்படம் எடுத்தபொழுது.

எங்களை வரவேற்று வீட்டினுள்ளே அழைத்து சென்றார். “மின் இணைப்பை துண்டிக்க கோரி நான் இரண்டு வருடங்கள் முன்பு மனு கொடுத்தேன். அன்றிலிருந்து, எங்கள் முப்பாட்டன்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையில வாழறேன். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து ஊற்ற தானியங்கி கிடையாது, நாங்களே கையால எடுத்துகிறோம். மாவை அரைக்க அம்மிக்கல்.”

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தனது போராட்ட காலத்தை பற்றி பேச ஆரம்பித்தார், “கூடன்குளத்திலே போராட்டம் நடைபெற்றப்பொழுது, நான் இங்கே சென்னையில் பணிபுரிந்துக்கொண்டிருந்தேன். போராட்டம் என தெரிந்தவுடன், வெள்ளிக்கிழமை இரவுகளில் பேருந்தை பிடித்து..”

‘கூடங்குளம் செல்வீர்களா?’ என நாங்கள் கேட்டதற்கு, “இல்லை, கோவையில் உள்ள என் வீட்டிற்கு செல்வேன். சனி, ஞாயிறு இரு நாட்களும் கணினியின் மூலம், முகநூல் மற்றும் ட்விட்டரில் #SaveKoodankulam என்ற குறியீடுடன் புரட்சிகரமான பதிவுகளை செய்தென். அது மட்டுமா, கூடங்குளம் போராட்டத்தின் புகைப்படத்தை தான் எனது முகநூல் புகைப்படமாக வைத்திருந்தேன். இதுப்போல, நான் செய்த போராட்டங்கள் எத்தனை! அசிங்க அசிங்கமாக காவிகளை திட்டிய நாட்கள் எத்தனை!”

“எப்படியோ இந்த பாசிச மத்திய அரசு கூடங்குளத்தில் அனல் மின் நிலையம் கட்டி, மின்சாரத்தை உற்பத்தி செய்ய தொடங்கியது. இவ்வளவு கடினமாக போராடியும் எங்களை மதிக்காம வர்ற மின்சாரம் எனக்கு தேவையே இல்ல. அதனால்தான், கூடன்குளத்திலிருந்து வர்ற மின்சாரத்தை எங்க வீட்டுக்கு அனுப்பாதீங்கன்னு மின்வாரியத்திடம் கோரிக்கை வைத்தேன். அதெல்லாம் தனியா பிரிக்க முடியாதது, வேணும்னா மின் இணைப்பையே தூண்டிச்சுக்கோங்கன்னு சொல்லிட்டாங்க. அதான், மின் இணைப்பை தூண்டிச்சுகிட்டேன்.” என பெருமையுடன் சொன்னார் அந்த போராளி.

“என்னுடன் இணையத்தில் போராடிய அனைவரும், என்னைப்போல் கூடங்குளம் மின்சாரம் வேண்டாம் எனக்கூறி மின் இணைப்பை துண்டித்துக்கொள்ள வேண்டும். என்னைப்போல் எங்கள் போராட்ட தலைவர் உதயகுமாரும் மின் இணைப்பு இன்றி வாழ்வார் என நம்புகிறேன்.  மின் இணைப்பு இல்லாததால் என்னிடம் கணினி, கைபேசி இல்லை. நீங்க தான் இதை பிரசூரிச்சு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்,” என நாங்கள் கிளம்பும்முன் வேண்டுகோள் விடுத்தார்.