தமிழக சட்டசபை மேசைகளில் மோடியின் உருவம் தென்பட்டதால் பரபரப்பு

சென்னை:  மூன்று மாதங்களுக்கு பிறகு தமிழக சட்டசபை நேற்று கூடியது. முதலில், உள்ளே நுழைந்த திமுகவினரின் கண்களிலே பல மேசைகளில் மோடியின் உருவம் தென்பட்டதினால் அவ்விடமே பரபரப்பானது.

ModiInAssembly

சட்டசபையின் புகைப்படத்தில் உங்கள் கண்களுக்கு மோடி தெரிந்தால், நீங்கள் ஓர் போராளி. இல்லையெனில், நீங்கள் ஓர் காவி.

கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில் முதல்வர் அவர்கள் பெருன்பான்மையை நிரூபித்தார். அப்பொழுது, பெரும் அமளி ஏற்பட்டு, எதிர்க்கட்சி தலைவரின் சட்டையெல்லாம் கிழிந்தது. அதற்குப்பின் நேற்று தான் சட்டசபை கூடியது.

முதலில் உள்ளே நுழைந்த திமுகவினர், சிறிது நேரத்திலேயே அலறியடித்துக்கொண்டு வெளியே வந்துள்ளனர். அங்கே காவலில் இருந்த ஓர் அதிகாரி இச்சம்பவம் பற்றி கூறுகையில், “நான்கு திமுக உறுப்பினர்கள் அலறிக்கொண்டே ஓடிவந்தனர். என்னவென்று விசாரிக்கையில், சட்டசபையின் பல இடங்களில் மோடியின் உருவம் தெரிந்ததாக பீதியுடன் கூறினர். எனினும், அதிமுக அணி உள்ளே சென்று அமைதியாக அமர்ந்தனர். நாங்கள் ஓர் காவல் படையோடு சென்று உள்ளே பார்த்தப்பொழுது எங்கள் கண்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. எல்லா மேசைகளிலும், இருக்கைகளிலும் மேலும் சுவற்றிலும் பிரதமர் அவர்களின் உருவம் தென்படுகிறதா எனக் கூர்ந்து ஆராய்ந்தோம். ஆனால், யார் கண்ணிலும் அவ்வாறு தென்படவில்லை.”

இதைக் காரணம் காட்டி வழக்கம்ப்போல சட்டமன்றத்தை புறக்கணித்து வெளியிலேயே நடப்பு செய்தது திமுக. பதற்றத்துடன் காணப்பட்ட உறுப்பினர்கள் படைசூழ, செயல் தலைவர் சுடாலின் பேட்டியளித்தார். “தமிழகத்திலே பாஜக பின்வாசல் வழியாக வர முயற்சி செயகிறது என நாங்கள் கூவியப்பொழுது எல்லாரும் எங்களை பார்த்து நகைத்தனர். ஆனால், இன்றோ, சட்டசபையில் உறுப்பினரே இல்லாத பாஜகவின் மோடியின் உருவம் சட்டசபை எங்கிலும் தென்பட்டது. இதைக்கண்டு எனது மனம் புண்ணாகியுள்ளது. சட்டசபையினிலே மோடியின் உருவம் இருக்கும்வரை, தமிழகத்திலே நல்லாட்சி மலருமா? பாசிசம் பேசும் கட்சியின் ஆதிக்கம் நிலைத்திருக்க, எங்களை போன்று நீதி, நேர்மை, நியாயம் மற்றும் சனநாயகம் இவைகளை உயிரென மதிக்கும் அரசியல்வாதிகள் இனி சட்டசபை வாசலை மிதிக்கமாட்டார்கள்.” என கூறினார்.

‘காவலர் கண்களில் மோடியின் உருவம் தென்ப்படவில்லை’ என் நாம் கூறியதற்கு, “காவலர்கள் ஆளுங்கட்சியிடம் சரணடைந்துள்ளார். ஆளுங்கட்சியினர் மோடியிடம் சரணடைந்துள்ளார். ஆதலால், இவ்விருவருக்கும் மோடியின் உருவம் தென்ப்பட்டாலும், அதனை கும்பிடுவார்களே தவிர, எவ்வாறு அதனை எதிர்ப்பார்கள்.” என பதிலளித்தார் சுடாலின்.

இதனை தொடர்ந்து மெரினா கடற்க்கரை, வள்ளுவர் கோட்டம் மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடந்தது. “சட்டசபை மேசைகளை அம்பானி விலைக்கு வாங்கிவிட்டார். அதானியின் குழுமம் தான் சட்டசபை புனரமைப்பு பணிகளை செய்தது. இவர்கள் தான், சட்டசபை எங்கிலும் மோடியின் உருவம் தெரியுமாறு செய்துள்ளனர். அவ்வுருவம் மறையும் வரை, நாங்கள் சட்டசபை செல்லவே மாட்டோம்.” என கம்யூனிச கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

சட்டசபையில் மோடியின் உருவம் தெரிந்ததை கவர்னரிடம் சென்று முறையிட ராஜ் பவன் விரைந்தனர் எதிர்க்கட்சியினர். ஆனால், அங்கே மோடியே இரண்டு காவலர்களாக தென்பட, சட்டென்று திரும்பி அறிவாலயம் விரைந்தனர்.