பிளாஸ்டிக் அரிசிக்கு மத்திய அரசு தடை; பிளாஸ்டிக் அரிசி உண்ணும் போராட்டத்தை தமிழக போராளிகள் ஆரம்பித்தனர்

சென்னை: ஆந்திரா மூலமாக தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி ஊடுருவி வந்ததாக வந்த தகவலையடுத்து தமிழகமெங்கும் பிளாஸ்டிக் அரிசியை பற்றி பரவலாக பேசிவருகின்றனர். இதனை தொடர்ந்து, பிளாஸ்டிக் அரிசிக்கு மத்தியில் ஆளும் மோடி அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து தமிழகமெங்கும், பிளாஸ்டிக் அரிசிக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன.

“உண்ணும் உரிமையை பறித்திடாதே, உழைக்கும் இடைத்தரகர்கள் வயிற்றில் அடித்திடாதே”, என பல பதாகைகளை போராட்டங்களில் காண முடிந்தது.

முதலாவதாக, சென்னை ஐஐடி வாசலில் இருபத்திமூன்றாம் ஆண்டு மேற்படிப்பு பயிலும் இளம் மாணவர்கள் போராடினர். நடுசாலையில் பானை அமைத்து, அதிலே பிளாஸ்டிக் அரிசியை பொங்கி, அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.

அதில் கலந்துக்கொண்ட ஓர் 45 வயது மாணவர் கூறுகையில், “இத்தனை வருடங்களாக நாங்கள் நினைத்ததை உண்டு வந்தோம். சோற்றிலே சேரோ, குப்பியில் எச்சை துப்பியோ, தேநீரில் கழிவுநீரோ, எது கலந்தாலும் நாங்கள் அதனை ருசித்து வந்தோம். இப்பொழுது இந்த பாசிச மோடி அரசு, முதலிலே மாட்டுக்கறி தடை விதித்தது, இன்றோ பிளாஸ்டிக் அரிசிக்கு தடை விதித்தது. எங்கள் கல்லூரி உணவகத்தில் நாங்கள் சாப்பிடாத பிளாஸ்டிக் அரிசியா? யாரை கேட்டு இந்த அரசாங்கம் தடை விதித்தது?”

இவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஏபிவிபி மாணவர்கள் வாயில் பிளாஸ்டிக் அரிசியை ஓர் 52- வயது மாணவர் திணிக்க, அவர்கள் தாக்க, பெரும் கலவரம் நிகழ்ந்தது.

“பிளாஸ்டிக் அரிசியை உண்பதினால் நாம் இயற்கையை அழிவிலிருந்து காக்கிறோம்”, என நமது உள்ளூர் முகநூல் விஞ்ஞானி ஓர் காணொளி மூலம் நிரூபித்தார். “பிளாஸ்டிக் கழிவுகளை எறிந்து பூமியை நாம் அசுத்தம் செய்கிறோம். அது கரைய பல வருடங்களாகும். ஆனால், நாம் பிளாஸ்டிக் அரிசியை மென்று முழுங்கி, உள்ளே சென்று கடமுடதடனட என்று அதனை மனித கழிவுடன் சேர்த்து வெளியேற்றுகிறோம். மனித கழிவு பூமியிலே கரைந்து, எருவாகிறது. பண்டைய மனிதன் இவ்வாறு தான் பூமியிலே பிளாஸ்டிக் கழிவுகளை சேர்க்காமல், மனித கழிவாக வெளியேற்றி வந்தான். இது அம்பானி மற்றும் அதானியின் கூட்டுச்சதி. நம் மண்ணை மரணமடைய செய்ய வேண்டும் என கார்ப்பிரேட் பருந்துகளுக்கு துணைப்போகிறார் மோடி. நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.”, என அந்த காணொளி கூவியது.

மற்றொருபுறம், ஸ்டாலின் மற்றும் வேறுபல மதசார்பற்ற இசுலாமிய கட்சிகள் மோடியை கண்டித்து போராடினர். ஸ்டாலின் பேசுகையில், “எதை திண்பது என்பது எங்கள் உரிமை? அதை கேட்க நீ யார்? அரிசியில் அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக. இது ஓர் அரிசியல். எந்த ஒரு தன்மான தமிழனும் இனி பிளாஸ்டிக் அரிசியை புறக்கணிக்கமாட்டான். காபியில் கல் கலந்து குடித்தவன், அரிசியில் பிளாஸ்டிக் சேர்ந்ததை சாப்பிட மாட்டானோ? நாங்க ஆட்சிக்கு வந்தா, பிளாஸ்டிக் அரிசி மட்டுமில்லாம, நைலான் அரிசி, ரப்பர் அரிசி, வாய்க்கு அரிசி என பல அரிசிகளை அறிமுகப்படுத்துவோம்.”

இதனை தொடர்ந்து, நியூஸ் ஏழரை தொலைக்காட்சியில், பிளாஸ்டிக் அரிசி தடையால் வேலை இழந்து தவிக்கும் பல்வேறு இடைத்தரகர்களை பற்றிய ஓர் சோக குறும்ப்படம் வெளியானது. பல்லாயிரம் கடத்தல்காரர்களின் வாழ்க்கையை மோடி அழித்ததை பார்த்து அனைவரின் கண்களும் கலங்கின.

இந்த தடையை எதிர்த்து தமிழகப் போராளிகளின் தலைவர் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளா சட்டசபையிலே ஓர் தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானத்தினப்படி, பிளாஸ்டிக் அரிசியுடன் கேரளா அரிசியையும் மக்கள் உண்ணலாம் என அவர் முன்மொழிந்தார். இதனால், நாடெங்கிலும் ஓர் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.