பிறந்தநாளன்று அனைவரும் பயங்கரமாக ஐஸ் வைத்ததால் கலைஞருக்கு மீண்டும் காய்ச்சல்

சென்னை: முத்தமிழ் அறிஞர், தமிழ்த்தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 94-ஆம் பிறந்தநாள் மற்றும் சட்டமன்றத்தில் வைர விழா வெகு விமரிசையாக கடந்த மூன்றாம் தேதி கொண்டாடப்பட்டது.

KamalKalaignar

இரண்டு ஐஸுக்கு நடுவே ஒளிரும் உதயசூரியன்

பிறந்தநாளன்று கேக் வெட்டி மகிழ்ந்த கலைஞர் அவர்களின் உடல்நிலையில் தோய்வு ஏற்பட்டுள்ளதாக கோபாலபுரம் வட்டாரம் கூறுகிறது. இதைப்பற்றி, எங்களிடம் பேசிய அவ்வட்டாரத்தில் ஒருவர், “கலைஞரின் பிறந்தநாளிற்க்கான ஏற்பாடுகள் கடந்த மாதமே ஆரம்பமாகிவிட்டது. செயல் தலைவர் அவர்களின் மேற்பார்வையில், கழக உடன்பிறப்புகள் பம்பரமாய் சுழன்று பணிப்புரிந்தனர். அனைவரின் எண்ணம் போன்று, இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியும் இனிதே நடந்து முடிந்தது. ஆனால், விழா நடந்த அடுத்த நாளிலிருந்து கலைஞர் அவர்கள் காய்ச்சலால் அவதிப்படுவதாகவும், மருத்துவர்கள் வந்து போனதாகவும் இங்கே பேசிக்கொள்கிறார்கள்.”

அவரிடம் பேசி, ஓர் மருத்துவரின் தொடர்பு எண்ணை வாங்கினோம். அந்த மருத்துவரும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் பேசினார், “நீங்கள் கேள்விப்பட்டது உண்மை தான். அய்யா கலைஞர் அவர்களுக்கு ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் இருக்கிறது. அவரது சுவாசக்கோளாறுக்கான சிகிச்சையின்ப்படி அவரது வீட்டையே நாங்கள் பாதுகாத்து வந்தோம். ஆனால், இந்த பிறந்தநாள் விழாவினால்தான் இத்தனை பிரச்சனையும்.” என்று கொஞ்சம் இடைவெளி விட்டார்.

“அவரது அறையில் கிருமிகள் மூலமாக இப்பொழுது அவருக்கு பிரச்சனை வரவில்லை. அனைத்திற்கும் காரணம் அவருக்கு அனைவரும் வைத்த ஐஸ் தான். பிறந்தநாளிற்கு ஒரு வாரம் முன்பே, வைரமுத்து, திராவிட தலைவர்கள், சிலபல ஊடகங்கள் என ஐஸ் வைக்க ஆரம்பித்தனர். போதாதக்குறைக்கு இந்த தடவை முகநூல் மற்றும் ட்விட்டரில் அவர் மீது பனிமலையையே வைத்தனர் நமது உடன்பிறப்புக்கள். இதெல்லாம் சேர்ந்து தான் அவருக்கு ஜலதோஷம் தந்துள்ளது.”

“மேலும், மூன்றாம் தேதியன்று அனைத்து செய்தி சேனல்களும் பயங்கரமாக ஐஸ் வைக்கவே, அவருக்கு காய்ச்சலும் வந்துவிட்டது.”, என முடித்தார் அந்த மருத்துவர்.

‘இப்பொழுதுதான் நீங்கள் இருக்கீங்களே.. சரியாகிவிட்டதா?’ என்ற எங்களது கேள்விக்கு,அந்த மருத்துவர் சிடுசிடுவென பதில் அளித்தார், “மற்ற எல்லாரும் வைத்த ஐஸ் மூலம் வந்த காய்ச்சலை சரிசெய்துவிட்டோம். ஆனால், உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் வைத்தாருப்பாருங்க ஐஸ். அவரைப்போலவே அது ஒரு குழப்பமான ஐஸ். அந்த ஐசை குறைத்தால் தான் அய்யாவிற்கு உடல்நலம் சீராகும். அதற்கான முயற்சிகளை செய்ய உலகின் பல பெரிய மருத்துவர்களிடம் நாங்கள் பேசிவருகிறோம். சீக்கிரமே, அவர் நலம் பெறுவார்.”