மத்திய அரசு கொண்டுவந்த இலவச வைஃபையை எதிர்த்து எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் போராட்டம்

சென்னை: எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் இன்று பெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ‘வீரத்தமிழ் இயக்கம்’,’அனுதினம் போராட்டம்’ மற்றும் பல தமிழ் போராளிகள் சார்ந்த இயக்கங்கள் இந்த போராட்டத்தை நடத்தினர்.

எப்பொழுதும் போராட்டம் என்றால் இரயில் மறியல் நடைப்பெறும், ஆனால், நூதன போராட்டமாக, நடைமேடையில் மட்டுமே இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்குபெற்ற ஓர் அமைப்பின் தலைவரிடம் பேசினோம்.

அவர் கூறியதாவது, “மத்திய இரயில் மந்திரி சுரேஷ் பிரபு அவர்கள் கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தவர், எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் இலவச வைஃபை திட்டத்தையும் தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம்.”

‘இலவச வைஃபை என்பது மக்களுக்கு நல்லது தானே’, என்று நாம் சொன்னதும் சினங்கொண்டு பதிலளித்தார் அவர், “யாருடைய வைஃபை யாரு பங்கு போடுவது? அய்யா, கால் கஞ்சி குடித்தாலும் மானத்தோடு வாழ்பவர் நாம். உயிரே போனாலும் தாலி கட்டிய மனைவியை காப்பாற்றும் குலம் எமது. இப்படி பண்பாடோடு வாழும் தமிழகத்திலே வந்து வைஃபை இலவசமாக தருகிறோம், அதுவும் மக்கள் கூடும் தொடர்வண்டி நிலையத்தில் வைத்து கூறு போட்டு விற்கும், இந்த மானங்கெட்ட பொழப்பை நீங்கள் ஆதரிக்கிறீரா?” என்று சத்தம் போட்டார்.

அருகில் இருந்தவர்கள் உடனே ‘மோடி அரசே, மானங்கெட்ட இலவச வைஃபை திட்டத்தை திரும்பப்பெறு’ என கோஷமிட்டனர். சற்று மண்டைகாய்ந்த நிலையில், கூட்டத்திலிருந்து விலகி தகவல் தொழில்நுப்ட நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அமைத்த போராட்டக் குழுவிடம் வினவினோம். #BanWiFiAtEgmore என்று எழுதப்பட்ட பதாகைகளை அவர்களிடம் காண முடிந்தது.

“காற்றை களங்கப்படுத்த நினைக்கிறார் மோடி. தமிழ்நாட்டில் காவியை காற்றலையில் பிண்ணப்பார்க்கிறார். இதற்க்கு ஒருபோதும் எந்த தன்மான தமிழனும் தோள் கொடுக்கமாட்டான். இலவச வைஃபை என்பதனால், எழுச்சிமிகு மாணவர்கள் கேண்டி கிரஷ் விளையாடுவார்கள், ஆபாச படம் தரவிறக்கம் செய்து பார்ப்பார்கள் என்று திட்டமிட்டே கொடுக்கப்பட்ட சேவை இது. நாங்கள் அனைவரும் இதனை புறக்கணிக்கிறோம்.” என்று கொக்கரித்தார் ஓர் ஐ.டி ஊழியர்.

உடனே, அங்கு அமர்ந்திருந்த அனைவருக்கும் ஓர் வாட்டசாப்ப் செய்தி அனுப்பினார். “எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் இருக்கும் இலவச வைஃபை மூலமாக உங்களது கைபேசி செய்திகளை மத்திய அரசு படிக்கிறது. உங்களது வருங்கால போராட்ட திட்டங்களை முறியடிக்க காவிகள் செய்யும் வேலையே இது. ஆகவே, எழும்பூர் அருகே வர நேர்ந்தால், உடனே உங்களது கைப்பேசியை அணைத்து விடுங்கள். இப்படிக்கு, அமெரிக்காவில் இருந்து டாக்டர் ரொனால்ட். —- தன்மானமுள்ள தமிழன் இதனை உடனே பகிர்வான்.” என்ற அந்த வாட்டசாப்ப் செய்தியை எங்களுக்கும் அனுப்பினார் அவர்.

“ஊரெங்கும் பரப்புங்கள் தோழரே! மத்திய அரசின் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் வரவிடக்கூடாது. பாஜக இங்கே கால் பதிக்க விட மாட்டோம்”, எனக் கூறி கோஷங்கள் எழுப்ப ஆரம்பித்தார்.

எச்சரிக்கை தோழர்களே! எழும்பூர் இரயில் நிலையத்தில் நீங்கள் உங்கள் கைபேசியில் அடிக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் மோடி இவ்வாறு படித்துக்கொண்டிருப்பார்.

எச்சரிக்கை தோழர்களே! எழும்பூர் இரயில் நிலையத்தில் நீங்கள் உங்கள் கைபேசியில் அடிக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் மோடி இவ்வாறு படித்துக்கொண்டிருப்பார்.