ஆயிரம் வாலா சரவெடியின் ஆயிரம் வெடிகளும் வெடித்ததில், அதை பற்ற வைத்தவர் அதிர்ச்சியில் இறந்தார்

Filed under: Assorted,Featured,Latest,Naatu Nadappu,PJ Corner |

மேலும், தனபால் வீட்டில் இருந்து மீதம் இருந்த இரண்டு ஆயிரம் வாலா வெடிகளை கைப்பற்றிய போலீசார் அதனை ஆராய்ந்து வருகின்றனர் .

மேலும், தனபால் வீட்டில் இருந்து மீதம் இருந்த இரண்டு ஆயிரம் வாலா வெடிகளை கைப்பற்றிய போலீசார் அதனை ஆராய்ந்து வருகின்றனர் .

சென்னை: தமிழகமெங்கும் தீப ஒளி திருநாளான தீபாவளி நேற்று வானவேடிக்கையுடன் கொண்டாடப்பட்டது. ஆனால், தீபாவளி என்றால் நாடெங்கும் சோக நிகழ்வுகள் நடப்பதுமுண்டு. அதுப்போல தான், தனபால் அவர்களின் மரணமும்.

32 வயதான தனபால் ஓர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிப்புரிந்து வந்தார். ஒவ்வொரு வருடமும் தீபாவளி என்றால் தனபாலுக்கு குதூகலம் தான். “எங்கள் தெருவில், ஊரில், ஏன் இந்த மாநிலத்திலேயே அதிகம் வெடிகள் வெடிப்பவர் யார் என்றால் அது தனபால் தான். அவரது தந்தை பட்டாசு விற்பனையை எடுத்து நடத்தி வந்தார். விற்பது தந்தை, வாங்கியது என்னவோ மகன் மட்டும் தான். வேறெவருக்கும் விற்க பட்டாசுகள் இல்லாமல் மகனே அனைத்தையும் வெடித்து தீர்த்து விடுவான். அப்படிப்பட்ட பட்டாசுப்பிரியனான தனபாலுக்கு இப்படி ஆகிவிட்டதே!” என்று புலம்பினார் அவரது தெருக்காரர்.

சம்பவம் நடந்த நாள், அதாவது நேற்று, தனபால் அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து எண்ணெய் குளியல் முடித்து, சென்னை நகரின் முதல் வெடியை பற்ற வைத்தார். “நகரின் முதல் வெடியை வெடிக்கும் பெருமை எங்கள் அண்ணனுக்கே சேரும்.”, என கண்ணீருடன் ஆரம்பித்தார் அவரது சித்தப்பா மகன். “நேற்று காலையும் ஆயிரம் வாலா சரத்தை சாலையில் அழகாக பரப்பிவிட்டார். பின்பு, ஊதுவர்த்தியை எரிய வைத்து, சரத்தின் திரியை கிள்ளினவர், அதனை பற்ற வைத்தார். பற்ற வைத்து, திரும்பி இராச நடையுடன் எங்களை நோக்கி நடந்து வந்தார். ஆயிரம் வாலாவும் வெடிக்க ஆரம்பித்தது.”

“பொதுவாக, நம்ம ஊர் சரங்கள் வேடிக்கையானவை. நூறு வாலா சரம் என்றால் அதில் பத்து வெடிகள் வெடிக்கும். ஆயிரம் வாலா என்றால் ஓர் நூறு வெடிகள், பத்தாயிரம் வாலா என்றால் ஓர் ஆயிரம் வெடிகள், என பத்தில் ஒரு பங்கு வெடி தான் வெடிக்கும். சிறுவயது முதல், இப்படி பார்த்து பழக்கப்பட்ட எங்களுக்கு நேற்று வெடித்த சரம் மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. தனபால் பற்ற வைத்த சரம் நூறு வெடிகளை தாண்டி வெடித்துக்கொண்டிருந்தது. அதிர்ச்சியில் உறைந்த தனபால், திரும்பி, வெடிக்கும் ஆயிரம் வாலாவை உற்று நோக்கினார். ஆயிரம் வாலாவின் ஆயிரம் வெடிகளும் வெடித்து முடிக்கும்ப்போழுது, தனபால் மார்பை இறுகிப்பிடித்துக் கொண்டே அங்கேயே சரிந்தார். நாங்கள் சென்று பார்த்தபொழுது அவர் இறந்தே விட்டார்.” என்று கூறி முடித்து அழ ஆரம்பித்தார் தனபாலன் உறவினர்.

தனபாலன் இறப்பை உறுதி செய்த மருத்துவர் கூறுகையில், “சில சமயம், ஒருவருக்கு நடக்க வேண்டிய ஒன்று நடக்காமல் போனால், நெஞ்சு வலி வரும். ஆனால், சிலருக்கோ, நடக்க வாய்ப்பே இல்லாதது நடந்தாலும் நெஞ்சு வலி வரும். தனபாலுக்கு வந்த நெஞ்சு வலி இரண்டாவது வகையை சேரும். அவர் பற்ற வைத்த ஆயிரம் வாலாவில் ஆயிரம் வெடிகளும் வெடித்தது என்பதனை கேட்ட அதிர்ச்சியில் எனக்கே சற்று நெஞ்சு வலித்தது தான். அருகில் இருந்து அதை கண்ட அவர் அங்கேயே நெஞ்சு வலியில் இறந்ததில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.”

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த ஆயிரம் வாலா வெடித்த இடத்தை சுற்றி வளையம் அமைத்து விசாரித்து வருகின்றனர். .