“காங்கிரஸ் மத்தியில் இருந்தப்பொழுது காவிரி நதி காட்டாறு போல ஓடியதே, அய்யகோ, இன்று பாலைவனம் ஆகிவிட்டதே” – குமுறும் தமிழக காங்கிரஸ்

மத்தியிலே காங்கிரஸ் ஆண்டப்பொழுது, முல்லைப்பெரியாறு பிரச்சனை வரவே இல்லை. காவேரி பிரச்சனை அறவே இல்லை. தமிழகம் செழிக்க 2019-ல் தமிழர்கள் காங்கிரசிற்கு வாக்களிக்க வேண்டும், என தமிழ காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மத்தியிலே காங்கிரஸ் ஆண்டப்பொழுது, முல்லைப்பெரியாறு பிரச்சனை வரவே இல்லை. காவேரி பிரச்சனை அறவே இல்லை. தமிழகம் செழிக்க 2019-ல் தமிழர்கள் காங்கிரசிற்கு வாக்களிக்க வேண்டும், என தமிழக காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை: காவிரி நதி பங்கீடு தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து விட்டதாக கூறி தமிழக காங்கிரஸ் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.  இந்த போராட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், இதனால் காங்கிரசின் பெயர் தமிழகத்தின் எட்டு திக்கும் ஒலிக்க ஆரம்பித்துள்ளதாகவும் பல முக்கிய தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

“முன்பெல்லாம், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தான் போராட்டம் நடக்கும். சத்யமூர்த்தி பவனில் மட்டும் தான் ஆர்ப்பாட்டம் நடக்கும். முதன்முறையாக, இரண்டிற்கும் வெளியே, ஒரு அந்நிய கட்சிக்கு எதிராக போராடியிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம்.”, என ஒரு முக்கிய பிரமுகர் நெகிழ்வுடன் கூறினார்.

நேற்று போராட்டம் என்பதனால், எந்த ஒரு காங்கிரஸாரையும் நாங்கள் தொடர்புக்கொள்ள இயலவில்லை. பல்வேறு முயற்சிக்குப்பின் இன்று தலைவர் மாணிக்கவாசகருடன் பேச முடிந்தது. அவரது தலைமையிலான முதல் வெற்றிக்கு அவரை வாழ்த்தினோம்.

“ரொம்ப நன்றி தம்பி! தமிழகத்தில் திராவிட கட்சிகள் பொய்த்து விட்டன. காமராஜர் ஆட்சிக்குப்பின் தமிழகம் இருண்டு கிடக்கிறது. அதற்க்கு ஒளியூட்ட எங்களை தவிர வேறெவராலும் முடியாது. தமிழகத்தில் காவி அரசியலை வேரூன்ற விடமாட்டோம்.” என மார்த்தட்டினார் மாணிக்.

காவிரி தொடர்பான மத்திய அரசிற்கு எதிரான போராட்டத்தை பற்றி வினவினோம். அவர் கூறுகையில், “காங்கிரஸ் மத்தியில் இருந்த வரை காவிரி பிரச்சனை இருந்ததே இல்லை. தமிழகத்தில் காவிரி நதி வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியதை எவராலும் மறுக்க முடியுமா அல்ல மறக்க முடியுமா? அறுபது ஆண்டுகளாக கர்நாடக அரசின் மண்டையில் கொட்டி, காவிரி நீரை பல அருவிகளில் கொட்ட வைத்தோம் நாங்கள் மத்தியில் ஆண்டபொழுது. ஆனால், இன்றோ மோடியின் அரசு தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்து விட்டதே. அய்யகோ! எங்கள் ஆட்சியில் காட்டாறு போல ஓடிய காவிரி, இன்று பாலைவனம் போல காட்சி அளிக்கிறதே அய்யகோ! இந்த பெரும்துயரத்தை உருவாக்கிய மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து நாங்கள் நடத்திய நேற்றைய போராட்டம் வெறும் முன்னோட்டம் தான்.”

அவரை சமாதானப்படுத்தி நாங்கள் ஓர் கேள்வியை முன்வைத்தோம், “அதாவது அய்யா, கர்நாடகாவை ஆள்வது காங்கிரஸ் கட்சி தான். உங்களது மேலிடம் அவர்களை நான்கைந்து வார்த்தைகள் கடிந்து பேசி, காவிரி பிரச்சனையை அடியோடு தீர்க்க முயலலாமே. நீங்கள் காங்கிரஸ் மேலிடத்திடம் இந்த அணுகுமுறையை கூறினீர்களா?”

சற்றே திக்குமுக்காடிய மாணிக், “கர்நாடகாவை ஆள்வது காங்கிரஸாக இருந்தாலும், மத்தியில் இருப்பது பாஜக தானே. நாங்கள் மத்தியில் இருந்த வரை காவிரி பிரச்சனை என்ற ஒன்று இருந்ததே இல்லை. 2019-ல், எங்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் ஆட்சியில் காவிரி பிரச்சனையே இருக்காது. மோடியை வாக்களித்ததற்காக மக்கள் இந்த ஐந்து ஆண்டுகள் என்னென்ன அவஸ்தைப் பட போகிறார்களோ!” என்று கூறிக்கொண்டே அவசரமாக தனது மகிழூந்தில் ஏறிக்கொள்ள, அது விர்ரென பறந்தது.