“இராவணன் எனும் தமிழ் பிராமிணனை எரிக்கும் வட இந்திய சாதி வெறியர்களுக்கு எதிராக போராடுவோம்” – களமிறங்கும் பெரியார் திராவிட போராளிகள்

சென்னை: தசரா எனப்படும் பண்டிகை வடமாநிலங்களில் பெரும் உற்சாகத்தோடு கொண்டாடப்படுகிறது. இதில் கடைசி நாள் அன்று, இராவணன் அவர்களின் பெரும் உருவம் ஒன்றினை வைக்கோல் மூலம் உருவாக்கி, அதனை எரித்து கொண்டாடுவர்.

"இராவணனின் வைக்கோல் பொம்மையை எரிக்கவில்லை, மறைமுகமாக, தமிழரின் போர்வாள் வைக்கோ அவர்களை எரிப்பதாக நாங்கள் கருதி மேலும் பல போராட்டம் அரங்கேற்றப் போகிறோம்", என வைகோவின் ஆதரவாளர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

“இராவணனின் வைக்கோல் பொம்மையை எரிக்கவில்லை, மறைமுகமாக, தமிழரின் போர்வாள் வைக்கோ அவர்களை எரிப்பதாக நாங்கள் கருதி மேலும் பல போராட்டங்களை அரங்கேற்றப் போகிறோம்”, என வைகோவின் ஆதரவாளர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

ஆனால், கடந்த சில வருடங்களாக, இந்த எரிப்பு விவகாரம் சில திராவிட அமைப்புகளுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம், சில திராவிட அமைப்புகள் இராவணனை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராமனை எரிக்க முடிவு செய்துள்ளனர். இதைப்பற்றி அறிய, இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தும் அமைப்புடன் தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டோம்.

‘பெரியார் திராவிட கேடயம்’ எனும் அந்த அமைப்பின் தலைவருடன் பேசினோம். கோபத்துடன் கொக்கரித்தார் தலைவர், “தசரா எனும் போர்வையில் திராவிடர்கள் மீதான தாக்குதல்களை பல நூற்றாண்டுகளாய் செய்து வருகிறார்கள் அந்த சாதி வெறி பிடித்த ஆரியர்கள். இராமன் என்பவர் ஆரியர்களின் கடவுள். அவர், தென்னோக்கி வந்து இங்கு ஆண்ட எங்கள் இராவணனை அழிக்கிறார். இதை, வருடா வருடம் தசரா என கொண்டாடி மகிழ்கின்றனர் வடக்கத்தியர்கள். அன்றும் ஆரியர்கள் திராவிடர்களை அழித்தனர், இன்றும் இந்தி திணிப்பு மற்றும் மாட்டிறைச்சி தடை மூலம் திராவிடர்களை அழிக்கின்றனர்.”

அவரை ஆசுவாசப்படுத்தி ஓர் கேள்வியை முன்வைத்தோம். “இராவணன் ஓர் பிராமணன். பெரியார் கூறுகையில் ‘பிராமணன் பாம்பு இவ்விரண்டை கண்டால்..'”.. என நாங்கள் கேட்கும்ப்பொழுதே குறுக்கிட்டார். “இராவணன் பிராமணன் என்பது எனக்கும் தெரியும். மேலும், பெரியார் அவ்வாறு கூறியதில் ஓர் அர்த்தம் உண்டு. பாம்பை அடிக்காமல் பிராமணனை அடித்தால் அவன்  அங்கிருந்து ஓடி விடுவான். பின்பு, பாம்பு அவனை கடிக்காது. பிராமணனை பாம்பு கடிக்க கூடாது என்ற  நல்லெண்ணத்தில் பெரியார் அவ்வாறு கூறியுள்ளார். அது மட்டுமல்ல, சமீபத்தில் ரகுராம் ராஜனிற்கு ஆதரவாக நாங்கள் களமிறங்கினோம். அவரும் தமிழ் பிராமணர் தான். ஆனால், அவருக்கு நாங்கள் ஆதரவு கரம் நீட்டவில்லையா? அது மட்டுமா? எங்களது பேரவைக்கு ஆட்களை சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ‘தி இந்து’ பத்திரிக்கைக்கூட பிராமணர்கள் ரொம்பி வழியும் பத்திரிகை தானே. ” என பதில்களை வீசி  எறிந்தார்.

“அப்படியென்றால், ஏன் கடந்த வருடம் சில தமிழ் பிராமணர்களின் பூணூலை அறுத்தீர்கள்” என நாங்கள் கேட்க, உடனே வந்தது பதில். “அந்த பிராமணர்கள் பாவம்! பழைய நூலை அணிந்திருந்தனர். அது எங்களுக்கு கஷ்டமாக இருந்தது. அதனை வெட்டி எறிந்தால், அவர்கள் புது நூலை மாற்றிக்கொள்வார்கள் என எண்ணி தான் அவ்வாறு அறுத்தோம். நாளைக்கூட இராவணனிற்கு ஆதரவாக, நாங்களும் பூணூல் அணிந்து போராட்டம் நடத்த போகிறோம். ‘இராவணன் கல்யாணம்’ எனும் நிகழ்ச்சியும் நடைப்பெறும், அதில் எங்கள் இராவணர்களுக்கும் அவர்தம் மண்டோதரிகளுக்கு ஹோமம் வளர்த்து  தாலி கட்டி திருமணம் செய்து வைப்போம்.”, என முடித்துக் கொண்டார் தலைவர்.

இந்த சம்பவம் குறித்து ஓர் பகுத்தறிவுப் புயல் பேசுகையில், “இராவணன் தொழுது வணங்கியது சிவனை. தமிழரின் கடவுள் முருகனின் தந்தை தான் சிவன். ஆக, இராவணன் ஓர் இந்து அல்ல, தமிழர் மட்டுமே. பல நன்கு படித்த தமிழ் பிராமணர்கள் இந்து மதத்தை எதிர்த்து நிற்பதும் நான் கூறியதுடன் ஒற்றுப்போகிறதல்லவா?”