‘எப்போ கல்யாண சாப்பாடு போடுவ’ என அனைவரும் கேட்டதை அடுத்து, கல்யாண கேட்டரிங் சேவை நிறுவனத்தை தொடங்கினார் முன்னாள் ஐ.டி.ஊழியர்

Filed under: Assorted,Featured,Latest,Naatu Nadappu,PJ Corner |

சென்னை: சமீபத்தில் இளம் வயதினர் பலர் ‘ஸ்டார்ட்டப்’ எனப்படும் புதிய நிறுவனங்களை சிறிதளவில் ஆரம்பித்து, வெகு வேகமாக வளர்ந்து வருகின்றனர். இந்த மாதிரி ஸ்டார்ட்டப் நிறுவங்களை உருவாக்குவதில் பலர் தங்களது ஐ.டி. வேலையை துறந்தவர்கள் தான். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் வெங்கடேசன்.

எனது நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் என்னை போல பாதிக்கப்பட்ட கல்யாணமாகாத ஆண்கள் தான். அவர்களும், தங்களது உறவினர்களின் வாயை அடைக்கவே என்னுடன் சேர்ந்து, பந்திகளில் கல்யாண சாப்பாடு போடுகிறார்கள்.

எனது நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் என்னை போல பாதிக்கப்பட்ட கல்யாணமாகாத ஆண்கள் தான். அவர்களும், தங்களது உறவினர்களின் வாயை அடைக்கவே என்னுடன் சேர்ந்து, பந்திகளில் கல்யாண சாப்பாடு போடுகிறார்கள்.

புகழ்பெற்ற பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துக்கொண்டிருந்த வெங்கடேசன், இரண்டு வருடங்கள் முன்பு திடீரென தனது பணியை இராஜினாமா செய்தார். குடும்பம் மற்றும் நண்பர்கள் எதிர்ப்பை தாண்டி, இன்று ‘கல்யாண பந்தி’ எனும் ஸ்டார்ட்டப் ஒன்றினை வெற்றிகரமாக, மிகுந்த லாபத்துடன் நடத்தி வருகிறார். அவரது இந்த அசுர வளர்ச்சியின் பின்புலம் பற்றி அறிய, அவரது சொந்த அலுவலகத்தில் தரையிறங்கினோம்.

தமிழர் முறையில் வணக்கம் வைத்து வரவேற்றார் வெங்கடேசன். “புரட்டாசி மாதம் என்பதனால், அவ்வளவாக முஹூர்த்தங்கள் இல்லை. மற்ற மாதங்கள் என்றால், என்னை நீங்கள் பார்த்திருக்கக்கூட முடியாது.” என்று ஆரம்பித்தார்.

அவரிடம் “உங்களது இந்த விடாமுயற்சி, விஸ்வரூப வெற்றியின் உந்துதல் என்ன?” என்று கேட்டோம்.சிரித்துக்கொண்டே சுய சரித்தரத்தை ஆரம்பித்தார், “எனக்கு இப்பொழுது வயது முப்பது. மூன்று வருடங்களுக்கு முன்னர், எனது அண்ணனின் திருமணம் நடந்தது. அன்று முதல், என்னை பார்க்கும் அனைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கேட்ட கேள்வி இது தான் ‘எப்பொழுதுடா நீயும் கல்யாண சாப்பாடு போடுவ?’. மாதங்கள் போக போக, இந்த கேள்வியை கெட்டவர்களின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போனது.”

“அப்பொழுது எனக்கு அலுவலகத்தில் பெரும் எரிச்சல் தரக்கூடிய பணியில் இருந்து வந்தேன். அதைவிட, எரிச்சல் இந்த கல்யாண சமையல் கேள்விகள் தந்தது. அப்படி ஒரு நாள், நண்பனின் கல்யாண சமையல் சாப்பிட்டு வயிற்று எரிச்சல் வந்தது. இந்த மூணு எரிச்சலும் சேர்ந்து நான் பயங்கர கடுப்புல இருந்தேன். அப்போ தான், இந்த யோசனை வந்தது. இந்த கடுப்புக்கு காரணம் அந்த சமையல் செய்த அடுப்பு. அந்த சாப்பாடு பற்றிய கேள்வி தான் எனது மண்டையை குடைந்தது. இவ்விரண்டையும் ஒரே கல்லில் அடிக்க என்ன செய்யலாம் என நான் வியக்க, பின்மண்டை வியர்க்க ஓர் யோசனை வந்தது. அப்படி பிறந்தது தான், இந்த ‘கல்யாண பந்தி’ நிறுவனம்.”, என மூச்சு விடாமல் கூறி முடித்தார் வெங்கடேசன்.

“இந்த நிறுவனம் ஆரம்பிக்க, எனது ஐ.டி. வேலையை அடுத்த நாளே இராஜினாமா செய்தென். மூன்று மாதங்களில், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, இதோ இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. எனக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை. ஆனால், எவனும் என்னை அந்த கேள்வி கேட்பதே இல்லை. ஏதேனும் திருமணத்தில் என்னை பார்த்து அப்படியே ‘கல்யாண சாப்பாடு எப்ப போடுவ?’ னு யாராவது கேட்டா, அவங்கள அப்டியே பந்திக்கு கூட்டிகிட்டு வந்து, என்னோட ‘கல்யாண பந்தி’ சமையலை பரிமாறுவேன். சோத்தாலேயே அவங்க வாயை அடைத்து விடுவேன்.”, என்று விரல்களை சொடுக்கினார் அந்த இளம் தொழிலதிபர்.