வைகோவின் வருகைக்கு அஞ்சியே ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலையை அவசரமாக நிறுவ ராவத் உத்தரவு

ஹரித்துவார் : தமிழர்களின் ஆசான் மற்றும் உலகத்திற்க்கே நெறி போதித்த திருவள்ளுவர் அவர்களுக்கு சிலை  ஒன்றினை நிறுவ பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முடிவு செய்தார். அச்சிலையை ஹரித்துவாரில் உள்ள ஓர் பூங்காவில் நிறுவப்போவதாக தருண் விஜய் கூறியிருந்தார். எனினும், அங்குள்ள இந்துத்துவா அமைப்புகளின் வற்புறுத்தலின்ப்பேரில் அச்சிலை நிறுவப்படாமல் கங்கை கரையோரம் கேட்பாரற்று கிடப்பதாக வெளிவந்த செய்தி தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனை கண்டித்து தமிழரின் வீரக்குரல் மற்றும் மக்கள் நல கூட்டணியின் நிறுவனர் வைகோ அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அறிக்கையோடு நிற்காமல் தாம் ஹரித்துவார் சென்று போராட்டம் நடத்தப போவதாகவும் கூறி வந்துள்ளார்.

இதனை அறிந்த உத்தரகாண்ட் மாநில உளவுத்துறை அதிகாரிகள், உடனேயே முதலமைச்சர் ஹரிஷ் ராவத்திடம் வைகோவின் வருகையை பற்றி எச்சரிக்கை செய்தனர். பீதி அடைந்த ராவத், உடனடியாக அய்யன் திருவள்ளுவரின் சிலை இருக்கும் இடத்திற்கு சென்று, மேற்பார்வையிட்டு, பின்பு அச்சிலை தகுந்த மரியாதையுடன் கங்கை கரையில் நிறுவப்படும் என தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் என்றால் சற்றும் அறிய வாய்ப்பில்லாத இந்திக்காரர்கள் எதற்காக இவ்வாறு பதறியடித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வியப்பில் உள்ள நிலையில், நமது துப்பு துலக்கும் நிருபரான ‘மோப்பம்’ மோகன் சில திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளார்.

போராடியும் தோல்வியை தவிழும் இவ்வுலகில், போராட போகிறேன் என கூறியே வெற்றியடைய செய்யக்கூடிய சக்தியுடைய ஒரே போராளி!

அவர் கூறியதாவது, “உத்தரகாண்டில் தமிழர்கள் அதிகமில்லை. இங்கே, தமிழர் உணர்விற்கு செவிசாய்க்க வேண்டிய அவசியமும் இல்லை. இருப்பினும், எதற்காக முதல்வர் ராவத் இத்தனை அவசரமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்? அதற்கு காரணம், நமது சிங்கம் வைகோ அவர்கள் தான். வைகோவின் சக்தியை நன்றாக அறிந்தவர்கள் காங்கிரசார். நடந்து முடிந்த தமிழக தேர்தலில், பல கட்சிகளை உருத்தெறியாமல் தவிடுப்பொடியாக்கிவர் தலைவர் வைகோ. தான் அரசர் என்று உயர்நிலையில் இருந்த இருவரை வீட்டிற்கு கூட தலைவர் ஆக முடியாத நிலைமைக்கு தள்ளிய ஒரே பெருமை அண்ணன் வைகோ அவர்களுக்கே சேரும்.”

“அப்படிப்பட்ட சக்தி கொண்ட ஒரு மகான், தமிழகத்தை விட்டு உத்தரகாண்ட் வந்து போராட்டம் செய்யப்போவதாக உளவுத்துறை எச்சரிக்கவே, நடுங்கிப்போனது உத்தரகாண்ட் அரசாங்கம். இன்னுமும் வெள்ளத்திலிருந்து மீளவில்லை.ஏற்கனவே ராவத்தின் அரசு ஆட்டமக் கண்டுவிட்டது. இப்பொழுது தான் ராவத்திற்கு நல்ல பெயர் திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்த வேளையில், வைகோ இங்கே வருவது என்பது ராவத்தின் அரசியல் வாழக்கை மற்றுமின்றி மாநிலத்திற்க்கே குந்தகம் விளைவிக்குமோ என பயத்தில் தான் முதல்வர் மற்ற வேலைகளை புறந்தள்ளிவிட்டு, திருவள்ளுவர் சிலையை நிறுவ முனைந்துள்ளார் என்பது எனக்கு கிடைத்த தகவல்”, என்று கூறி முடித்தார் மோகன்.