இறைவி இரண்டாம் பாகத்தில் தலைகவசம் எப்பொழுதும் அணியுமாறு கதாப்பாத்திரங்களுக்கு காவல்த்துறை வேண்டுகோள்

Filed under: Assorted,Featured,Kollywood Kolaveri,Latest,PJ Corner,Puthu Release |

சென்னை: சமீபத்தில் வெளியாகி வெற்றி நடையோ அல்லது மக்களின் மனதில் நடையோ போட்டு கொண்டிருக்கும் திரைப்படம் இறைவி. ஒருபக்கம், தயாரிப்பாளர்களை அவதூறாக சித்தரித்தாக, இப்படத்தின் இயக்குனர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதற்கெல்லாம் சற்றும் அசையாத இயக்குனர் தற்பொழுது அப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்க முடிவெடுத்துள்ளார்.

இறைவியின் இரண்டாம் பாகத்தின் கதையே இன்னும் எழுதி முடிக்கவில்லை என்றாலும், மக்களின் நண்பர்களான காவல்த்துறை ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று எழும்பூரில் நடந்த காவல்த்துறை செய்தியாளர் சந்திப்பின்ப்போழுது, காவல்த்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இறைவி எனும் தமிழ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் படமாக்க போவதாக இயக்குனர் கூறியிருக்கிறார். அவரின் முயற்சி வெற்றிபெற எங்களது வாழ்த்துக்கள். எனினும், மக்களின் பாதுகாப்புக்காக நாங்கள் இரண்டு அறிவுரைகளை கூற வேண்டியுள்ளது.”

காவல்த்துறையின் வேண்டுகோளுக்கிணங்க இறைவியின் இரண்டாம் பாகத்தின் சுவரொட்டி இப்படி தான் இருக்குமோ?

கையில் இருக்கும் காகிதத்தை பார்த்து படிக்க தொடங்கினார், “முதலாவதாக படத்தில் வலம்வரும் கதாபாத்திரங்களுக்கு எங்களது வேண்டுகோள் – தயவுசெய்து, எப்பொழுதும் தலைக்கவசம் அணியுங்கள். மைக்கேல் இறந்துவிட்டார் என்பதனால் சாவகாசமாக இருக்க வேண்டாம். அது உங்களுக்கு சாவு-அவகாசமாக மாறிவிடும். எந்த கதாப்பாத்திரம் எப்பொழுது அருகில் இருக்கும் கனமான பொருளை எடுத்து உங்கள் மண்டையை பொளக்கும் என்று எங்களால் உறுதிக்கூற முடியாது. ஆகையால், எப்பொழுதும் தலைக்கவசத்துடன் இருப்பது உங்களை படத்தின் இறுதிக்கட்டம் வரை எடுத்து செல்லும். கொடூர நிகழ்வை எப்படியாவது உங்களை வைத்து அரங்கேற்றிவிட வேண்டும் என உங்களை உருவாக்கிய இயக்குனர் முயல்வார். ஜாக்கிரதையாக இருக்கவும்!!

“இரண்டாவதாக, அருகில் ஏதேனும் இரும்பு கம்பியோ, சுத்திலோ அல்லது பழைய சிலை இருந்தாலோ, அதை எடுத்து தூர வீசிவிடுங்கள். வீசும்ப்போழுது அருகில் யாரேனும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.”

“இந்த ‘எப்பொழுதும் தலைகவசம் அணிவது’ திட்டத்தால் உங்களுக்கு பல பயன்கள் உண்டு. உதாரணமாக, உங்களது வசன உச்சரிப்பு குழந்தை பேசுவதுப்போல இருந்தாலும், நீங்கள் யாரென்று திரைப்படத்தை பார்ப்பவர்கள் உணர மாட்டார்கள்.”, என்று சந்திப்பை முடித்தார் காவல்த்துறை செய்திதொடர்பாளர்.

திரைக்கதை எழுதும் பணியில் இருந்த இயக்குனரை எங்களால் தொடர்புக்கொள்ள முடியவில்லை. “படத்தின் கதாபாத்திரங்கள் தலையில் தலைக்கவசம் அணிந்தால் என்ன, மற்ற பாகங்களில் கத்தி-அருவாவை பாய வைக்கலாமா என்று இயக்குனர் யோசித்து கொண்டிருக்கிறார்.”, என்றார் இயக்குனரின் நெருங்கிய நண்பர்.