‘சகாயம் 2016’ என்று கிளம்பியவர்களை தனிப்படை அமைத்து தேட வேண்டும் – காவல்த்துறைக்கு சகாயம் வேண்டுகோள்

Filed under: Arusuvai Arasiyal,Featured,Latest,Therthal Kalakalappu |

சென்னை: மாவட்ட ஆட்சியர் மற்றும் கிரானைட் ஊழல் விவகாரத்தை விசாரிக்கும் அதிகாரியான சகாயத்தை அறியாதவர்கள் தமிழகத்தில் இல்லை.

அவரது நேர்மையான வாழ்க்கையும், சுத்தமான பணியும் மனதில்க்கொண்டு தமிழகத்தின் இளைஞர்கள் அவரை அடுத்த முதல்வர் என்று சில மாதங்களுக்கு முன்னர் தலையில் வைத்து ஆடினர். ‘சகாயம் 2016’ என்ற லட்சியத்துடன் முகநூலில் அவரது நிழற்ப்படம் பகிர்தல் மற்றும் டுவிட்டரில் அவரின் சாதனைகளை பற்றி பதிவு செய்தல் போன்றவற்றில் நமது இளைஞர்கள் சிலர் ஈடுப்பட்டு வந்தனர்.

2016ஆம் ஆண்டிற்க்கான சட்டசபை தேர்தலும் நடந்தாயிற்று. அதில் ஆதிமுக வெற்றியும் பெற்றது. சகாயம் தேர்தலில் களம் இறங்காமல் ஒதுங்கியே இருந்தார். ஆனால், அவரே தற்பொழுது காவல்த்துறையிடம் முறையிட்டு, ‘சகாயம் 2016’ என்று கிளம்பியவர்களை கைது செய்யும்ப்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

"நல்ல வேலை, என்னை மறந்து விட்டனர் வழக்கம்போல. இல்லையேல், சகாயம் என்கிறவனின் வாழ்க்கை கசாயம் ஆகியிருக்கும்."என்று பெருமூச்சு விட்டார் சகாயம்

“நல்ல வேலை, என்னை மறந்து விட்டனர் வழக்கம்போல. இல்லையேல், சகாயம் என்கிறவனின் வாழ்க்கை கசாயம் ஆகியிருக்கும்.”என்று பெருமூச்சு விட்டார் சகாயம்.
புகைப்பட மூலம்: தி ஹிந்து

விவரம் அறிந்து அதிர்ந்துப் போன நாம், நேரே சென்று சகாயம் அவர்களிடமே வினவினோம். வணக்கம் கூறி பேச ஆரம்பித்தார் சகாயம், “எனக்கு எனது தொழில் மற்றும் நான் வகிக்கும் பதவி மீது மிகுந்த மரியாதை உண்டு. அதனால் தான், சத்தியம் தவறாமல், இலஞ்சம் வாங்காமல், இத்தனை நாள் வேலை செய்துக்கொண்டிருந்தேன். எனது நேர்மையை நான் விளம்பரப்படுத்த விரும்பாதவன். ஆனால் ஒரு கும்பல்..” என்று கண்கள் சிவக்க, தான் அமர்ந்த நாற்காலியின் கைகளை கோவமாக பற்றினார்.

தண்ணீர் அருந்தி ஆசுவாசப்படுத்திய பின்பு, அவர் தொடர்ந்தார், “நான் கிரானைட் ஊழல் பற்றி விசாரித்து கொண்டிருக்கையில், என்னை முதல்வர் ஆக்க வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புவதாக, என்னுடைய நண்பர்கள் சிலர் கூறினார்கள். நானும் அதை ஓர் நகைச்சுவை என்று நினைத்து ஒதுக்கினேன். பின்பு, சில நாட்களில், எனது உறவினர்களும் அவ்வாறு கூறினர் . எனது உறவினர் பையன் ஒருவன் தனது கைபேசியில் முகநூல் பதிவுகளை காண்பித்தான். அதில் இருந்த எனது புகைப்படம் மற்றும் வாசகங்கள் என்னை அதிர செய்தன.”

“இந்த இளைஞர்களுக்கு வேறு வேலையே கிடையாது. ஏற்கனவே, நான் மிகவும் ஆபத்தான பணிகளை மேற்கொண்டு வருகிறேன். இதில் என்னை மிகவும் அதிபயங்கரமான அரசியலில் தள்ள பார்த்தனர். தேர்தல் நேரத்தில் ஏதும் செய்யாமல், செய்திகளில் இடம்பெறாமல் இருக்க நான் பட்ட பாடு எனக்கு மட்டும் தான் தெரியும். எங்கே எனது வாழ்க்கையை இந்த புரட்சிகர இளைஞர்கள் முடித்து விடுவார்களோ என்று அஞ்சி தூக்கம் இழக்காத நாட்கள் இல்லை. “, என்று தனது நெற்றி வியர்வையை துடைத்துக் கொண்டார்.

“இவர்களை இவ்வாறே விட்டுவைத்தால், 2021-ல் மீண்டும் ‘சகாயம் 2021’ என்று கிளம்பி மீண்டும் எனது தூக்கம் மற்றும் பணிகளை கெடுத்து விடுவார்கள். நானும் இவர்களை நம்பி களம் இறங்கினால், டெபொசிட் இழக்க வைத்து ஓட்டாண்டி ஆக்கியும் விடுவார்கள். அதனால் தான், காவல்த்துறையிடம் அவர்களை தண்டிக்க வேண்டிக்கேட்டு கொண்டுள்ளேன்.”, என்று பேசிமுடித்தார் சகாயம்.

இதைப்பற்றி காவல்த்துறையினர் கூறுகையில், “சகாயம் அவர்களின் வற்புறுத்தலின்ப் பேரில் நாங்கள் தனிப்படை அமைத்து தேடி வருகிறோம். ‘சகாயம் 2016’ என்று கிளம்பியவர்களை சுற்றி வளைத்து பிடித்து, அவர்களுக்கு சீமானின் தேர்தல் பரப்புரை ஒலியை காதருகே கேட்க வைத்து தண்டிப்போம்.”