உறுதியளித்ததைப் போல இரண்டு திராவிட கட்சிகளையும் ஒழித்து விட்டேன் – கேப்டன் பெருமிதம்

சென்னை: தேர்தலில் தோல்வியுற்ற போதிலும், தமது இலட்சியத்தில் வெற்றிபெற்றுள்ளதாக மக்கள் நல கூட்டணியின் தலைவர் விஜயகாந்த் மார்தட்டி கொண்டுள்ளதாக செய்தி வந்தது. நேரத்தை வீணாக்காமல் விரைந்து சென்றோம் அக்கூட்டணியின் அலுவலகத்திற்கு.

அலுவலகத்தை சுற்றி சுற்றி நடைப்போட்டு கொண்டிருந்தார் தலையில் பச்சை துண்டுடன் வைகோ. “வாருங்கள் நண்பர்களே! மிகவும் துக்கமான நாள் எனது வாழ்க்கை வரலாற்றில். எத்துனை துக்கங்களையும் தாங்கும் இதயத்தை எம் தமிழ் மண்ணும் மக்களும் எனக்கு  தந்துள்ளனர்.ஆகையால், எமது மண்ணுக்காக இன்னும் எத்தனை தோல்விகளையும் தாங்குவான் இந்த வைகோ.”, என்று அவர் கணீர் குரலில் பேசிக்கொண்டிருந்தப் பொழுதே, கேப்டன் நாம் இருக்கும் இடம் நோக்கி வந்துக்கொண்டிருந்தார்.

“தா.. தூக்கி அடிச்சுடுவேன் பாத்துக்க..”, என்று நம் மீது எச்சிலை தூக்கி அடித்தார் கேப்டன். “தர்மரே பொறுக்கவும்..” என வைகோ கூற, “ஏய்! யார பார்த்து பொறுக்க சொல்லற?”. எதோ பேச வாய் திறந்த வைகோ, அமைதியாகி கையை முகவாய்கட்டையில் அழுத்திக்கொண்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்தார்.

“நான் என்ன சொல்ல வரேன்னா மக்களே! ஏய்! யாருயா நீ? அந்த டிவிகாரனா? ஹேய்! தூக்கி அடிச்சுடுவேன் பார்த்துக்க!”, என எங்களை பார்த்தும் மிரட்டினார். தேர்தல் முடிவுகளை பற்றி நாம் அவரிடம் கருத்து கேட்கையில், “அதாவது மக்களே! மக்களே! நான் கூறியதை தான் நடத்தி காண்பித்துள்ளேன். நான் என்ன சொன்னேனோ, அது தான் நடந்தது. ஆக, இந்த கேப்டன் சொல்வதை செய்து காண்பித்ததில் கிங்.”

“இருங்கள்! இருங்கள் தர்மரே. எனக்கு ஒரு சந்தேகம். நாம் ஒரு தொகுதியிலும் வெற்றிப்பெறவில்லை. நீங்களோ நின்ற தொகுதியில் டெபாசிட் இழந்து நிற்கிறீர். நாம் என்ன சொன்னோம், அதை நீங்கள் எப்படி செய்தீர்கள்?” என்று வைகோ குறுக்கிட்டார்.

வைகோவை பார்த்து தனது சிரிப்பை உதிர்த்த கேப்டன், எங்களை பார்த்து கூறினார், “இரண்டு திராவிட கட்சிகளையும் ஒழிப்போம் என்று சொன்னேன்ல. அந்த ரெண்டு திராவிட கட்சிகளையும் ஒரு தொகுதி ஜெயிக்க விடாமல் செய்து விட்டோம்ல. அதுனால.. நான் தான் கிங்.”.

“தெளிவாகத்தான் இருக்கிறீரா? திமுக மற்றும் அதிமுக எல்லா இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளதே. அப்புறம் எப்படி நீங்கள் சொன்னதை செய்தீர்கள்?”, என வைகோ குரல் உயர்த்த, சற்றும் அசராமல் சிரிப்பை அடக்கிக்கொண்டு கேப்டன் பதில் கூறினார், “அட! நீங்க அந்த திராவிட கட்சிகள்னு நெனச்சீங்களா? மதிமுக மற்றும் தேமுதிக இரண்டிலும் திராவிடம் இருக்கா? மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்.. தேசிய முற்போக்கு திராவிட கழகம்.. அது ரெண்டுலயும் திராவிடம் இருக்கு தானே.. நாம ரெண்டுப்பேரு கட்சியும் ஒரு எடத்துலயும் ஜெய்க்காம காணாம போயிட்டோமா? இப்ப சொல்லுங்க மக்களே! நான் சொன்னதை செஞ்சு காமிச்ச கிங் தானே?”

நாம் கைதட்ட, அதை பார்த்து கேப்டன் கைக்கூப்ப, பக்கத்து தேநீர் கடையிலிருந்து ஓர் பாட்டு காற்று வழியே எங்களை அடைந்தது. “அர்ஜுனா.. அர்ஜுனா.. அம்போனு விட்ட அர்ஜுனா..”. கேப்டன் செய்த சேட்டையும், காதில் விழுந்த பாட்டையும் பொறுக்க முடியாமல் வைகோ மீண்டும் நடைப்பயணத்திற்கு புறப்பட்டார்.