கைகூப்பியே இருந்ததனால் வேட்பாளரின் கைகள் ஒட்டிக்கொண்டன; பிரிக்க முடியாமல் தொண்டர்கள் தவிப்பு, இருப்பினும் வேட்பாளர் களிப்பு

Filed under: Arusuvai Arasiyal,Featured,Latest,Therthal Kalakalappu |

சென்னை: மேற்கு தாம்பரம் தொகுதியின் ‘நாங்கள் முன்னேற்ற கழக’ கட்சியின் வேட்பாளர் ‘செங்கை’ ராஜன். இவர் கடந்த இரண்டு மாதங்களாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொகுதியின் இந்டு இடுக்கு, சந்து பொந்து என்றும் பாராமல் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். திடீரென, ‘செங்கை’ ராஜனை இரண்டு நாட்களாய் தொகுதியில் காண முடியாமல் போனதும், மக்கள் கண்டுக்கொள்ளாமல் இருப்பினும், அன்ரியல் டைம்ஸ் அவ்வாறு இருக்க இயலாததால், அவரைத் தேடி அவரது வீட்டிற்கு சென்றோம்.

வீடு பூட்டி இருந்ததை கண்டதும், அவர் எங்கேனும் ஓடி விட்டாரா என்று அக்கம்ப்பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்துக்கொண்டிருக்கும்ப் போழுது, வந்தது ஓர் மகிழுந்து. அதில் இருந்து ராஜன் மற்றும் அவரது மனைவி மக்கள் இறங்கி வீட்டை நோக்கி நடைப்போட்டனர். ஓடி சென்று, அவர் முன் நின்று, அவரது திடீர் பிரச்சார விடுமுறை பற்றி கேள்வி எழுப்பினோம்.

கைகளை கூப்பியவாறே, ராஜன் பேச ஆரம்பித்தார், “வணக்கம் தம்பி! நான் சொல்லாவிட்டாலும் எனது கைகள் இனி வணக்கம் மட்டுமே கூறும். அப்படி ஆகிவிட்டது எனது நிலைமை. தேர்தல் பரப்புரை ஆரம்பித்ததிலிருந்து தினமும் கிட்டத்தட்ட பத்து மணி நேரம் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வந்தேன். தலைவர் மற்றும் பிரபலங்கள் என் சார்பாக பேசும்பொழுது, அருகே கைகூப்பியவாறு நிற்பது தான் எனது வேலை.”

எனது கைகளின் இடையே வெற்றிடம் இருக்கலாம், ஆனால், எனது கைகள் செல்லப் போவதோ வெற்றியிடம்.

எனது கைகளின் இடையே வெற்றிடம் இருக்கலாம், ஆனால், எனது கைகள் செல்லப் போவதோ வெற்றியிடம்.
(Image for Representational purposes only)

“நேற்று முன்தினம் நான் பிரச்சாரம் முடிந்து வீடு திரும்புகையில், கைகளை பிரிக்க முயன்றேன். சில நாட்களாக கூப்பிய கைகளை பிரிப்பது சிக்கலாய் இருந்தது. ஆனால் அன்று, வெகு நேரம் கைகளை கூப்பியே நின்றதனால் எனது கைகள் இரண்டும் ஒட்டிக்கொண்டு விட்டது போலும். முதலில் எனது தொண்டர்கள் எனது இரு கைகளையும் பற்றி இழுக்க முயன்றனர். பின்பு, நெருப்பை எனது விரல் ஓரங்களில் காண்பித்து பிரிக்க முயன்றனர். எல்லா முயற்சியும் தோல்வி அடையவே, என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கே வைத்து, எனக்கு இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்தும் கூப்பிய கைகள் கூப்பிய வண்ணமே உள்ளது.”, என்று விசும்பினார் ராஜன்.

அருகில் இருந்த ராஜனின் மகன் கூறுகையில், “வெகுநேரம் கைகளை கூப்பியவாறே வைத்து இருந்ததனால், அப்பா கைகளின் நடுவே ஓர் வெற்றிடம் (vacuum) உருவாகி உள்ளதாக மருத்துவர் சொல்கிறார். தேர்தல் பிரச்சாரம் முடியும் வரை கைகளை கூப்பாமல் இருப்பின், கைகளை பிரிக்க அறுவை சிகிச்சை செய்யலாம் என்றார். தேர்தல் முடிந்தப்பின் செய்துக் கொள்ளலாம் என அப்பா மறுத்துவிட்டார்.”

“இந்த செங்கை ராஜன், வெறுங்கை ராஜன் அல்ல, ஒரு வேங்கை என்றும், வாக்கை வெல்ல போகும் ராஜன் என்றும் நிரூபிப்பேன். இந்த கூப்பிய கைகளை தான் சின்னமாக வைத்துள்ளோம். ஆக, பிரச்சாரம் ஓய்ந்தப்பின்பும், வாக்களிக்கும் நாள் வரை நான் இந்த கூப்பிய கைகளுடன் சாதரணமாக நடந்தாலே அது பிரச்சாரம் தான். இது எப்படி இருக்கு?”, என்று சிரித்தார் சேர்க்கை ராஜன்.

அவரது மருத்துவரை அணுகியதில், “இப்பொழுது பணப்பட்டுவாடா செய்ய யோசித்து சிகிச்சையை மறுக்கிறார். அவர் தேர்தலில் ஜெயித்தப்பின்பு பணம் வாங்க இரு கைகள் தேவைப்படும். அப்பொழுது சேர்க்கை ராஜன், சேராக்கை ராஜனாக மாறிவிடுவார்.”, என்றார்.

“நமது எதிர்க்கட்சியை சேர்ந்த ராஜன் என்பவரது கைகள் கலந்தே இருப்பதாக செய்தி வந்துள்ளது. அவர் கைகலப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பதனை நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன் மக்களே. தன் கையே தனக்கு உதவி என்பர், ஆனால், நமது போட்டி வேட்பாளரோ தன் கைக்கே உதவி கேட்கும் நிலையில் உள்ளார். இவரை நாம் எவ்வாறு உறுப்பினர் ஆக்குவது?”, என்று மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார் ‘நாங்க மட்டும் தான் முன்னேற கழக’ கட்சியின் வேட்பாளர்.